புதுச்சேரி:

புதுச்சேரிக்கு மாநில அந்ததஸ்து வழங்கக்கோரி புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் டில்லியில் இன்று அனைத்து எதிர்க்கட்சியினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்பி., டி.கே.எஸ். இளங்கோவன் கலந்த கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய  தி.மு.க. எம்.பி. மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றுகூறினார்.

அவர் பேசியதாவது,  புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றவர். பாராளுமன்றத்தில் சிறப்புடன் பணியாற்றியவர். கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி தலைவர்களோடு நட்புணர்வோடு பழகக்கூடியவர். அவர் புதுவைக்கு முதலமைச்சராக வருவதை பெருமையாக நினைத்தோம். அவர் மூலம் புதுவைக்கு பல முன்னோடி திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் யானைக்கு அங்குசம்போல நாராயாணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி திகழ்கிறார்.

நடைமுறையில் உள்ள திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. நாராயணசாமி தனது சாதுர்யத்தால் கவர்னரை எதிர்த்து திறம்பட செயல்பட்டு வருகிறார். கல்வி, சுகாதாரம், சட்டம்- ஒழுங்கு, வளர்ச்சி பெறும் மாநிலம் ஆகியவற்றில் புதுவைக்கு விருது பெற்றது நாராயணசாமி யின் திறமைக்கு சான்று.

தனக்கு சால்வை கொடுத்த அதிகாரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டவர் கிரண்பேடி. வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய அதிகாரியை கண்டித்து கீழ்த்தரமாக நடந்து கொண்டவர். பா.ஜனதா நாடு முழுவதும் தாங்களே ஆள வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். இதற்காக பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.

யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசை சார்ந்துதான் உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுவை, தமிழகத் திற்கு தர வேண்டிய எந்த முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை. மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய பா.ஜனதா அரசை இதே ஒற்றுமையுடன் வீறுகொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம், வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.