சென்னை: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற திமுக எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் பல மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.பி.யும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.