கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக கூறி அதை சபைக்கு கொண்டு வந்து காட்டினர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இது அவை உரிமையை மீறிய செயல் என கூறி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று 3வது நாளாக இறுதி விசாரணை நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, திமுக தரப்பில், தடை விதிக்கப்பட்ட குட்கா எளிதில் கடைகளில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்ட மன்றத்துக்கு குட்கா பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டது என்றும், இதில் உரிமை மீறல் இல்லை என்றும், சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் சார்பு வழக்கறிஞர், சட்டமன்ற விதிகளின்படி, சபாநாயகர், அனுமதியின்றி இத்தகைய பொருட்களைக் சபையில் காட்ட முடியாது என்றும், அவை விதிகளை மீறிய செயல்பட்டதால், இதை உரிமை மீறல் குழு விசாரிக்க அனுப்பப்பட்டது என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட பொருளை, சபையில் காட்டியது உரிமை மீறலா இல்லையா என்பதை தான் பார்க்க வேண்டும். அவையின் கண்ணியத்தை காக்கவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
மூன்று நாள்கள் தொடர் விசாரணை முடிந்ததையடுத்து வழக்கை வரும் செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.