
நெல்லை:
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில் சட்டசபைக்கு வந்த தி.மு.க.வினர் மோதலை உருவாக்கும் நோக்கோடு வந்தார்களா என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அவர், சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த சம்பவங்கள் பற்றி தனது கருத்தைத் தெரிவித்தார்.
“இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் இதுவரை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது கிடையாது” என்றார்.
மேலும், “சட்டசபையில் இருந்து எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஸ்டாலின் மிரட்டியதாகவும், கையில் பிளேடு வைத்திருக்கிறோம் என்றும் எங்களை வெளியேற்றினால் கைகளை அறுத்துக்கொள்வோம் என்று துரைமுருகன் மிரட்டியதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளன.
சட்டசபைக்கு வந்த போது எதிர்கட்சியினரின் (தி.மு.க.) வாகனங்களை காவலர்கள் சோதனை செய்தனர். இதையும் குற்றமாகச் சொல்கிறார்கள். வாகனங்களை சோதனையிடுவதில் தவறேதும் இல்லை” என்ற வைகோ, “மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்கள் சட்டசபைக்குள் வந்தார்களா” என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சட்டசபையில் அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர். இவர்கள் (தி.மு.க. எம்.எல்.ஏக்கள்) வெளியேறாமல் இருந்ததால் அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர் தனபால். இதில் தவறில்லை. நாடாளுமன்றத்தில் நானும் ஒருமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன்” என்ற வைகோ, “1988ஆம் ஆண்டு ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் சட்டசபையில் கலவரம் வெடித்தது. கலவரம் செய்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்த உறுப்பினர்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக அப்போதய சபாநாயகர் பி.எச். பாண்டியன் அறிவித்தார். ஆனால் சில தினங்களில் ஆளுநர் குரானா, தமிழக அரசை நீக்கினார்” என்று வைகோ தெரிவித்தார்
[youtube-feed feed=1]