மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் யானை செங்கமலம் குளிப்பதற்கு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து யானை செங்கமலம் நீச்சல் குளத்தில் குளிந்து மகிழ்ந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்றும் அழைப்பது உண்டு. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் வடிவமாக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த ஆலய மூலவரின் திருநாமம், ‘வாமதேவப் பெருமாள்.’ உற்சவரின் திருநாமம்தான் ‘ராஜகோபால சுவாமி.’ தாயாரின் திருநாமம் ‘செங்கமலத் தாயார்’ என்பதாகும். மேலும் செண்பகலட்சுமி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டா பத்தினி, ஹேமாம்புஜ நாயகி போன்ற பெயர்களிலும் தாயாரை அழைக்கிறார்கள். ஆலய உற்சவரின் பெயரில்தான் இந்த ஆலயம் விளங்குகிறது.

இந்த கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானையின் பெயர் செங்கமலம். தற்போது  34 வயதாகும் அந்தப் பெண் யானைக்கு எந்த யானைக்கும் இல்லாத அளவிற்கு செங்கமலம் யானையின் தலைப்பகுதியில் அதிக முடி காணப்படுவது விசேஷம். இந்த செங்கமலம் யானையை 2003-ம் ஆண்டு கேரளாவிலிருந்து வாங்கி வரப்பட்டு கோவிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவில் யானை நீராடும் வகையில் கடந்த ஆட்சி காலத்தில்,  ரூ. 75 ஆயிரம் மதிப்பீட்டுல ஷவர் வசதி பண்ணி கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது,  செங்கமலம் யானைக்கு தமிழகஅரசு ரூ.10 லட்சம் செலவில்  நீச்சல் குளம் கட்டிக் கொடுத்துள்ளது.

இந்த நீச்சல் குளம் இன்று செங்கமலம் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, செங்கமலம் யானை கோவில் குளத்தில் இறங்கி நீராடி மகிழ்ந்தது.

இந்த நீச்சல் குளம்   செங்கமலம் யானை குளிக்கிறதுக்கு வசதியாக  9 அடி ஆழத்துடனும்,  30 அடி அகலமும், 30 அடி நீளமும்  கொண்டதாக உள்ளது. மேலும், இதற்கான தனி மோட்டார் மூலமா தண்ணீர் வசதியும் அரசாங்கம் ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கு. இதை பார்க்கும் பக்தர்கள்  செங்கமலம் யானைக்குத் தமிழக அரசாங்கம் நீச்சல் குளம் கட்டிக் கொடுத்திருப்பது, அதுக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்.” என்கின்றனர்.

இதுகுறித்து வீடியோவுடன் பதிவிட்டுள்ள திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா,  இன்று எனது ஆருயிர் செல்லகுட்டி செங்கமலத்திற்கு நீச்சல் குளம் ♥️ வாயில்லா இந்த அழகிக்கு முதல் சேவை விரைவில் எங்கள் #மின்னும்_மன்னை மக்களுக்கு பிரம்மாண்டமான நீச்சல் குளம் என பதிவிட்டு உள்ளார்.