நெல்லை: திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஆலடி அருணா. இவர்  மூன்று முறை ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானவர்.  திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.  அவரது மறைவுக்கு  பிறகு, அவரது மகள் மருத்துவரான பூங்கோதைக்கு திமுக வாய்ப்பு வழங்கியது. அவரும்அரசியல் களத்தில் குதித்து, எம்எல்ஏவாக வெற்றி பெற்று,  கடந்த திமுக ஆட்சியின்போது  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.  தற்போதும்,  ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அவரை குடும்பத்தினர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பூங்கோதை  தற்கொலை முயற்சி செய்ததற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 6 மாதங்களில் வர இருக்கும்  சூழலில் திமுக எம்எல்ஏவின் தற்கொலை முயற்சி நெல்லை  மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.