விழுப்புரம்
மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி இன்று ஜூம் செயலி மூலம் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் புதிய கல்விக்கொள்கை, ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பொன்முடி, ”மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை மூலம் ஆர் எஸ் எஸ் சித்தாந்தங்களைப் புகுத்த முயல்கிறது. தொடர்ந்து ஒரே நாடு,ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை என பொதுமக்களுக்கு எதிராக நடந்து வருகிறது, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறந்து ஒற்றையாட்சியை நோக்கிச் செல்கிறது.
தமிழகம் இந்தியாவில் சிறந்த கல்வியை அளித்து வரும் வேளையில் 60% கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும் விதமாக இந்தக்கொள்கை அமைந்துள்ளது. இது மும்மொழி கொள்கையைக் கொண்டு வந்து இந்தியைத் திணிக்க முயல்கிறது.
கல்வி உரிமையை மாநில அரசுக்கு கல்வி உரிமை வழங்கினால் மட்டுமே அப்பகுதி மக்களின் தேவை குறித்து முடிவு எடுக்க முடியும்
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் தொலைக்காட்சி மூலம் மாநில அரசு பாடம் நடத்த உள்ளது இது மாநில அரசின் இயலாமையைக் காட்டுகிறது.
தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புள்ள பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதை திமுக ஒரு நாளும் அனுமதிக்காது. புதிய கல்விக்கொள்கை அமலாவதைத் தடுக்கு தேவையான முயற்சிகளை திமுக மேற்கொள்ளும்.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி வரலாறு உள்ளது. அதை விடுத்து ஒரே நாடு எனச் சொல்வது சரி அல்ல. பிற மாநிலத்தவர்கள் சேர சோழ வரலாற்றைப் படிப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்..