சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றக்கோரி திமுக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்ததில் காலியான ஆர்கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்தால், அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார் எனவே அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும்  ஜார்ஜ் அதிமுகவின் சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படுவார் என்றும்,  ஜல்லிகட்டு தடைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய அறப்போராட்டம் முடிவுக்கு வரும் நேரத்தில், சசிகலா அதிமுகவின் தலைவர்கள் உத்தரவை கேட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலவரத்தை உருவாக்கினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டபோது,  கூவத்தூர் ரிசார்டில் வலுகட்டாயமாக அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருந்த சசிகலா தரப்பினருக்கு உடந்தையாக ஜார்ஜ் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றும்,  ஓ பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது அவர் தொலைபேசியில் அழைத்தால் கூட பேசாதவர் ஜார்ஜ்.

இவர் தலைமையில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடைபெற்றால், அது  ஜனநாயக முறைப்படி அமைதியாக நடைபெறாது என்றும், எனவே,  ஜார்ஜை உடனே இடம்  மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக  தலைமை செயலாளருக்கும்  திமுக கடிதம் எழுதியுள்ளது.