சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவற்றை தீர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
மருத்துவப்பணியிடங்களை அதிகரிப்பு, தகுதிக்கேற்ற ஊதியம், பணியிடக் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான சம்மேளனம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போதைய பேச்சுவார்த்தையில் 6 வாரத்துக்குள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப் பட்டது.
2 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டி கடந்த 25ம் தேதியில் இருந்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும்18,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 4வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், சேலம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந் நிலையில் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை நேரில் சந்தித்து திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
மு.க. ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அரசு மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது. 100க்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பிரச்னையை தீர்க்காதது வருத்தம் தருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.