சென்னை: இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்  என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50000ஐ நோக்கியும், பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந் நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு மட்டும் வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

 

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் கூறி உள்ளதாவது: மீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன @CMOTamilNadu  19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை! இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுபோன்று அவர் மற்றொரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

 

ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே #Covid19-ஐ தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும்.  கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்! என்று கூறி உள்ளார்.