இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள்

சென்னை,

 

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அத்துடன் அவர் சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, வைரவிழாவும் கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலில் மிக மூத்த தலைவரான கருணாநிதிக்கு இன்று 94வது பிறந்தநாள்.

இதையொட்டி அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட ஏராளமான தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
வயோதிகம் காரணமாக உடல் நலம் குன்றி ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க யாரும் வரவேண்டாம் என கட்சியினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நேற்று திமுக வெளியிட்ட வீடியோ ஒன்றில் கருணாநிதியிடம் வைரவிழா மலரை காண்பிக்கும் காட்சி வெளியானது.

இன்று மாலை கருணாநிதிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்படும் சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சியின் மேடை தலைமை செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா மைதானத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மைதானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மு.க.ஸ்டாலின் விழா மேடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திமுக தலைவர் பிறந்தநாளையொட்டி திமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து சென்னையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.


English Summary
DMK leader Karunanidhi's 94th birthday today