சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. சென்னை மாநகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே கடநத 2011ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் திமுக கைப்பற்றிய நிலையில், தற்போது மீண்டும் மீண்டும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு  பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.  அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.  தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஓட்டுப்பதிவு முடிந்ததும்  268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்கு எண்ணும் மையங்களில் மையங்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை  தொடங்கியது.

காலை 9மணி நிலவரப்படி 139 நகராட்சிகளில் 49 நகராட்சிகள் முன்னிலை தெரிந்து இருந்தது. அதில் தி.மு.க. 40, அ.தி.மு.க. 6, பா.ம.க. 1 நகராட்சிகளில் முன்னிலை பெற்று இருந்தன. பிற கட்சிகள் இரண்டு நகராட்சிகளில் முன்னிலை பெற்று இருந்தன.

தேர்தல் நடந்த 489 பேரூராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி 212 பேரூராட்சிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்து இருந்தது. அதில் தி.மு.க. 153, அ.தி.மு.க. 23 பேரூராட்சிகளில் முன்னிலை பெற்று இருந்தன. மொத்தத்தில், 18 மாநகராட்சிகளிலும், 69 நகராட்சிகளிலும், 212 பேரூராட்சிகளிலும் தி.மு.க. முன்னிலை பெற்று இருந்தது. அ.தி.மு.க. எந்த மாநகராட்சிகளிலும் முன்னிலை பெறவில்லை. 6 நகராட்சிகள், 32 பேரூராட்சிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலை பெற்று இருந்தது.

ஆனால் நேரம் செல்லச்செல்ல திமுகவின் வெற்றி வாய்ப்பு கூடிக்கொண்டே சென்றது. அதிமுக கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலம் உள்பட, எடப்பாடியின் தொகுதி, வடசென்னையின் பெரும் பகுதிகள் திமுக வசம் சென்றன.

மாலை 5மணி நிலவரப்படி,  334 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், 134 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 13 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம்  சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, உள்பட பல மாநகராட்சிகளை திமுக கைப்பற்றி உள்ள நிலையில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளும் திமுக யானை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

திமுக தலைவரும், முதலமைச்சரும் கூறியபடி, உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளாட்சியில் திமுக கைப்பற்றி இமாலய சாதனை படைத்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  உறுப்பினர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி மாநகராட்சியின் மேயரை மற்றும் தங்களது உள்ளாட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

திமுகவின் இமாலய வெற்றிக்கு உதவி தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்ததேர்தலில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளை மக்கள் அடியோடு வேரறுத்து விட்டதாகவே தெரிகிறது.