சென்னை

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவின் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக எதிர்க்கட்சிகளின் கோட்டை எனக் கூறப்படும் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  இது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “திமுகவின் கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்று தான் இந்த வெற்றி,  திமுகவின் காட்சிக்கு இந்த வெற்றி மூலம் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.   இந்த மகத்தான வெற்றியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்ததற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இன்று அதிமுகவின் கோட்டை என கூகூறப்பட்ட கொங்கு மண்டலத்தையே கைப்பற்றி உள்ளோம்.   இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்குத் தரப்பட்ட ஒதுக்கீட்டால் சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.  இதுவே திராவிட மாடல் புரட்சி ஆகும்.

இந்த தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  அவை அங்குப் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான வெற்றி தானே தவிர பாஜகவுக்கான வெற்றி இல்லை. ” என தெரிவித்தார்.