டில்லி

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.   அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது.   ஜெயலலிதாவின் மரணம் மற்றும் சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தை 2017 ஆம் வருடம் செப்டம்பர் 25 ஆம் தேதி அரசு அமைத்தது.    இந்த விசாரணையால் தங்கள் நற்பெயர் கெடும் எனக் கூறி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து விசாரணைக்கு இடைக்காலத் தடை வாங்கியது.

இந்நிலையில் தற்போதைய திமுக அரசு இந்த ஆணையத்தின் ஆயுளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.   திமுக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த ஆணையத்தின் விசாரணையைத் தொடர்ந்து விரைவில் முடிக்கக் கோரி மனு செய்யப்பட்டுள்ளது.   மேலும் முதல்வர் முக ஸ்டாலின் ஆணையத்தின் விசாரணை 90% வரை முடிந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விசாரணை ஆணையத்துக்காகத் தமிழக அரசு ஓவ்வொரு மாதமும் ரூ.4,26,462 செலவு செய்து வருகிறது.  இந்த செலவு ஆணைய ஊழியர்களின் ஊதியம், மற்றும் ஏற்படும் செலவுகள் ஆகும்.   எனவே இந்த செலவைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.