சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுகிறது திமுக அரசு என்றும், வன்கொடுமை வழக்குகள் இந்தாண்டு 6% குறைந்துள்ளன என்றும் என ஆதி திராவிடர், பழங்குடியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு‘  கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையில்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்,   அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி. செழியன், சி.வி. கணேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த  கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் திறனை மேம்படுத்தவும் பயிற்சிகளை வழங்கவும் தரவுகளை சேகரிக்கவும் ரூ. 1 கோடியே 59 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும், கடந்தாண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.  இதன் காரணமாக,  வன்கொடுமை வழக்குகள் இந்தாண்டு 6% குறைந்துள்ளன என்றார்.

தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான நிதியில் இருந்து கல்விக்கு மட்டும் 71.31% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எளிதில் கல்வி பெற கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமமான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.

இவ்வாறு  தெரிவித்துள்ளார்.