சென்னை: கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்தியஅமைச்சரை வரவழைக்க தெரிந்த திமுக அரசுக்கு, தமிழ்நாட்டு தேவைக்கான நிதி கேட்க முடியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், எல்லாத்துக்கும் டெல்லி பக்கம் கையை காட்டி தப்பிக்க முயல்கிறார்கள் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தமிழ்நாடு குறித்த சிஏஜி அறிக்கையில், தமிழ்நாடு அரசு சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தெரிய வந்துள்ளது. தமிழக அரசு வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சி.ஏ.ஜி., தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துவதை விட வருமானம் மற்றும் வாங்கி வங்கியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால், நிதி தள்ளாட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வருகிறது. 100நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு திவாலாகும் நிலைக்கு சென்றுவிடும் என எதிர்க்கட்சிகளும், நிதி ஆலோசகர்களும் எச்சரித்து வருகின்றனர். ஆனால், இதை கண் டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, விமர்சிப்பவர்களை தனது கட்சியினரையும், அமைச்சர்களையும் வைத்துஎதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. எதற்கெடுத்தாலும், மத்தியஅரசையே குற்றம் சாட்டி காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு சம்பளம் வழங்காததைச் சுட்டிக்காட்டினால், தங்களது வழக்கமான பாணியான “மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்” என்பது போல டெல்லி பக்கம் கையை நீட்டி தப்பிக்க முயல்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
ஏதோ திமுக ஆட்சி அமைத்த பிறகு தான் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்று அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமக்கு முறையாக நிதி வழங்குவது இல்லை என்பது நான் எப்போதும் சொல்லிவரும் கருத்து தான். மத்திய அரசின் நிதியைப் பெற்றும் சரி; மத்திய அரசிடம் இருந்து நிதி வராத போதிலும் சரி- மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களில் எந்த தொய்வும் அஇஅதிமுக ஆட்சியில் ஏற்பட்டதில்லை.
அப்படியொரு நிர்வாகத் திறமிக்க ஆட்சியை நாங்கள் நடத்தினோம். உங்களைப் போன்று எதற்கெடுத்தாலும் டெல்லியை கைகாட்டும் “பொம்மை” ஆட்சி நடத்த வில்லை.
கருணாநிதி நாணய வெளியீட்டிற்கு மத்திய பாஜக அமைச்சரை அழைத்து வரத் தெரிந்த உங்களுக்கு, 39 எம்.பி.க்கள் இருந்தும், உரிய அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கான நிதியை பெறாதது ஏன் ? உங்களுக்கு மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகின்ற நிர்வாகத் திறன் இல்லையென்றால், அதனை ஒப்புக்கொள்ளுங்கள்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது நிதிகளை முறையாகப் பெற்று நிறைவான ஆட்சி செய்தோம் என்பதை நினைவில் கொள்க”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.