சென்னை: அதிமுக திட்டத்தை நம்ம ஸ்கூல் என ஸ்டிக்கர் ஒட்டி ரூ.3 கோடியை வீணடித்துள்ளது திமுக அரசு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ந்தேதி அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, “தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் பேராசிரியர் அன்பழகன். அவருடைய நூற்றாண்டை நாம் இன்றைக்கு அரசின் சார்பிலே கொண்டாடி வருகிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று அவருடைய பிறந்த நாளில், அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் மற்றுமொரு முன்னோடித் திட்டமாக நம்ம ஸ்கூல் திட்டம்  இங்கு தொடங்கப்படுகிறது.

“கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த அறிவுச்சொத்தை உருவாக்கித் தந்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்கு அனைத்து தரப்பினரும் நிதி உதவி வழங்குகள் என கோரிக்கை விடுத்தார்.

இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என  அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்ட  அறிக்கையில்,  ‘தமிழக அரசாங்கம் நம்ம ஸ்கூல் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்த கையோடு, அதை அதிரடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை நேரடியாகத் தத்தெடுக்கலாம் அல்லது பல்வேறு கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தித் தரலாம் அல்லது முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவலாம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

1990களில் கொண்டுவரப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) உள்ளிட்டவை பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership – PPP) என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு செயல்முறை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடர்ந்து எடுத்து வந்தன. அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளது போல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தனியார் சமூக பங்களிப்பு (Corporate Social Responsibility) என்ற வகையில் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்றும் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிக்குப் போதுமான நிதி உதவி செய்யலாம் என்று அதே அம்சங்களைப் பின்தொடர்ந்து நம்ம ஸ்கூல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது என சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த நம்ம ஸ்கூல் திட்டம், மக்கள் வரிப்பணத்தில் இதுநாள் வரை செயல்பட்டு வந்த அரசுப் பள்ளிகள் மீதான இறுதி தாக்குதல் ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை ஆதாரமாகத் திகழ்ந்துவரும் அரசுப் பள்ளிகளைப் படுவேகமாகத் தனியார்மயமாக்கும் இந்த முயற்சி வன்மையாகக் கண்டிக்கதக்கது. இத்திட்டத்தைத் தமிழக அரசாங்கம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, நம்ம ஸ்கூல் என்ற பெயரில் மீண்டும் துவங்கியுள்ளது என சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘  வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் 23.5.2017 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த திட்டத்தை தற்போது திமுக அரசு தங்கிலீஷில் ‘நம்ம ஸ்கூல்’ என்று பெயர் சூட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் துவக்கி வைத்துள்ளளார் என தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு துவங்கிய திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு, தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், மீண்டும் நம்ம ஸ்கூல் என்ற பெயரில் துவங்கியுள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தை, அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ள சூழலில் நட்சத்திர ஒட்டலில் சுமார் 3 கோடி ரூபாய் வீணடித்து விழா நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன்,  ஸ்டிக்கர் ஓட்டும் விழாவிற்கு மூன்று கோடி ரூபாயை வீணடித்தது விடியா திமுக அரசு என கடுமையாக சாடியுள்ளார்.