சேலம்: ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி, இந்த ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்தார்.
தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
சேலம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் 2000க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மாற்று கட்சியினரை வரவேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
“திமுக தலைவர் எப்பொழுது பார்த்தாலும் ஊடகச் செய்தி, பொதுக்கூட்டத்தில் பேசும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறுகிறார். அது இல்லை என்பதை இங்கு நிரூபித்து காட்டியுள்ளீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கூறுவார்கள். இங்கு கட்சியில் இணைந்தவர்கள் சாட்சி.
மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதற்கு அதிமுகவில் பல்வேறு கட்சியிலிருந்து இணைந்துள்ளீர்கள். அதிமுக வலுவான கட்சி என்பதற்கு சாட்சியாக அமைந்து வருகிறது. திமுக தேய்ந்து வருகிறது என்றவர்,
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் வரவேண்டும் என்பதற்காக கருணாநிதி, அவருக்கு பிறகு ஸ்டாலின், பின்னர் உதயநிதி, தற்பொழுது இன்பநதி. திமுகவில் நிதி என்ற பெயர் வைத்துள்ளார்கள். நிதி வேண்டும் என்பதற்காக வைத்துள்ளார்கள். திமுக மீண்டும் மன்னராட்சி, வாரிசு ஆட்சி, குடும்ப ஆட்சி.
ஏற்கனவே மக்கள் போராடி மன்னராட்சி, குடும்ப ஆட்சியை விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் மன்னராட்சி தமிழகத்தில் ஏற்பட துணை நிற்கக்கூடாது, ஏற்கனவே தேவையில்லை என்று தான் மன்னராட்சியை ஒழிக்கப்பட்டது என்றார். 2026 இல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தலாக அமையும். அப்பொழுது தான் மக்கள் வாழ முடியும் என்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக மக்களை குழந்தைகள் போல் பாவித்தார்கள். மக்களுக்கு என்ன தேவை அவர்களுக்கு என்ன செய்யவேண்டும், அரசின் மூலம் போடும் திட்டத்தின் மூலமாக மக்கள் என்ன பயனடைவார்கள் என்று பார்த்து பார்த்து திட்டங்களை வகுத்தார்கள். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம் தலைவர்கள். கருணாநிதி வீட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர். இதனால்தான் அதிமுகவை சீண்டி கூட பார்க்க முடியவில்லை, மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு பிரச்சினை வரும்போது உறுதுணையாக நின்றார்கள்.
அதிமுகவை ஒழிக்க பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை, ஏனென்றால் மக்களுக்கான கட்சியாக அதிமுக இருந்தது. எனக்கு பின்னாலும் நூறாண்டுகள் அதிமுக கட்சி வாழும் என்று மக்களை நம்பி தான் சொன்னார்கள். அதிமுகவிற்கு தனி தலைவர்கள் கிடையாது, அனைவரும் தலைவர்கள் பொறுப்பாளர்கள் தான் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக சொத்து, வேற எந்த கட்சியும் இப்படி இருக்காது. அதிமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிமுக சொந்தம் என்றும் பேசினார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எண்ணற்ற திட்டங்களை அதிமுக நிறைவேற்றி கொடுத்துள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறு கிறார்கள், மக்களின் வரிப்பணத்தை தான் கொடுத்தார்கள். கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். அதிமுக போரடி தான் ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுத்தது, அவர்களாக மனதார கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 1500 ரூபாய் கொடுப்பதாக உறுதி அளித்தோம். சில பேர் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை நம்பி மாற்றி ஓட்டுபோட்டார்கள் என்றும் கூறினார்.
எம்ஜிஆரால் ஏழைகளுக்காக துவங்கப்பட்ட கட்சி அதிமுக. கண்ணை இமை காப்பது இருப்பதுபோல ஜெயலலிதா காத்தார்கள். அதிமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்லமுடியாத அளவிற்கு சிறப்பான ஆட்சியை அதிமுக அரசாங்கம் கொடுத்தது. தற்போது திமுக ஆட்சியில் அப்படி இல்லை. சிறுமிகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கற்பழிக்கிறார்கள். கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கு பார்த்தாலும் இருக்கிறது. இந்த திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்றார்.
ஒரு சில ஆசிரியர்களால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுகிறார்க பயிரை வேலி மேய்வது போன்று உள்ளது என கடுமையாக சாடியதுடன், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு கொடுக்காவிட்டால் மாநில அரசின் வருவாய் எடுத்து கொடுக்க வேண்டியது தானே, ஏழை எளிய மக்களுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.