சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர், அதிமுகவினரை குறி வைத்து திமுக அரச சோதனை நடத்துவதாகவும், அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறி உள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால், கோவையில் பரபரப்பு நிலவி வருகிறது. கோவையில் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றம் அவர் தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வேலுமணி அமைச்சராக இருந்தபோது முறைகேடாக டெண்டர் ஒதுக்கி அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
.சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல கோவையில் உள்ள அவரது வீட்டில் உள்ள கம்யூட்டரில் இருந்து ஆவணங்கள், ஹாரடுடிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. நீதிமன்றம் இருக்கும் போது காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி நடக்கிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம்” என்று கூறியுள்ளார்.