சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் 96-வது பிறந்த நாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அன்பழகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று அவருக்க பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதைத்தொடர்ந்து இன்று காலையில் கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். பெரியார் திடலில் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்தித்ர். அப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பழகனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து காலை தொட்டு வணங்கினார். மு.க.ஸ்டாலினுக்கு அன்பழகன் மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ப.ரங்கநாதன், மாவட்டச்செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, ம.மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் உள்பட ஏராளமான திமுக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.