சென்னை: திமுக தலைமை அறிவித்தப்டி இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் வாக்கில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், திமுகவில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவரது இடத்துக்கும், பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்ததால், அந்த பதவிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டி யிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொளி காட்சி மூலம் கூடும் திமுக பொதுக்குழுவில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. அதையடுத்து, அவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.