சென்னை
தனியார் நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்துக்கு நில ஒதுக்கீடு செய்தது குறித்து தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் திமுகவும் தற்போதுள்ள ஆட்சியைத் தக்க வைப்பதில் அதிமுகவும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரசு நிலத்தை பாஷ்யம் கன்ஸ்டிரக்ஷன் என்னும் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு என்றும், ஒரு சதுர அடியின் சந்தை விலை ரூ.25,000 ஆக உள்ள நிலையில் தனியார் நிறுவனத்துக்கு ரூ.12,500க்கு நிலம் ஒதுக்கீடு எனவும் திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் தனியார் நிறுவனம் 2078 வீடுகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதை அந்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த தனியார் நிறுவனத்துக்கு அரசு நிலத்தைக் குறைந்த விலைக்குக் கொடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு என திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த நில ஒதுக்கீட்டுக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்குப் பல கோடி லஞ்சம் கைமாறி இருப்பதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் இந்த நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்குவதற்கு வெளிப்படையாக ஏலம் கோராமல் ரகசியமாக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்க திமுக அந்த புகாரில் வலியுறுத்தியுள்ளது.