சென்னை: டிஎம்கே பைல்ஸ்2 என்ற பெயரில், திமுக நிர்வாகிகளின் ஊழல் சொத்து விவரங்களை தமிழ்நாடு மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்என்.ரவியுடன் வழங்கினார். பின்னர், அது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் நேற்று பிற்பகல் சந்தித்தனர். அப்போது, டிஎம்கே பைல்ஸ்2 என்ற பெயரிலான, திமுக நிர்வாகிகள் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்து விவரங்கள் குறித்த கோப்புகளை பெரிய பெட்டியில் வைத்து வழங்கினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
டிஎம்கே பைல்ஸ்2 , அளிக்கப்பட்டுள்ள சொத்து விவரத்தில், ரூ. 5,600 கோடி மதிப்பிலான ஊழல் விவரங்களையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம். ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்று பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, , ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஊழல் விவரம் குறித்த விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில், திமுக நிர்வாகிகள் முறைகேடு செய்ததாகக் கூறி ரூ.5,000 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பான விளக்கத்தையும் அண்ணாமலை அளித்துள்ளார். திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மதிப்புடன், ஆட்சியில் நடந்த மிக முக்கிய முறைகேடு என்று கூறி அது தொடர்பான கோப்புகளையும் இந்த விடியோவில் இணைத்துள்ளார்.
டிஎம்கே பைல்ஸ்2-ல் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு என்று ரூ.1343170000000 என்ற தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான எல்காட் நிறுவனம், இடிஎல் என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், அந்த இடிஎல் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம் ரூ.3000 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் சுமார் 2,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக விடியோவில் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் மூலம் எவ்வாறு முறைகேடு நடத்தப்பட்டது என்றும், விண்ணப்பித்த ஒரே நாளில் விநியோகஸ்தர்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மெடிகல் சர்வீஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாகவும் விடியோவில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாஜக சார்பில் நடைபெறும் பாதயாத்திரையின்போது ஊடகத்தினருக்கு விரிவாக விளக்குவேன் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.