சென்னை

மூக வலைதளத்தில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது திமுக புகார் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுக உள்ளிட்டோருக்கு  எதிராக வீடியோ மற்றும் பதிவுகள் வெளியிட்டு வந்தார். அவரது கருத்துக்களுக்கு வரவேற்பு இருந்ததைப் போல் ஏராளமான எதிர்ப்பும் இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாரிதாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் திமுகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாகப் பதிந்தார். மேலும் புள்ளிவிவரங்களையும் மாரிதாஸ் அளித்தார்.

இது திமுகவினருக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இதனால் திமுக தனது அமைப்புச் செயலர் பாரதி மூலம் சென்னை காவல்துறை ஆணையர்  அலுவலகத்தில் மாரிதாஸ் மீது புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் மாரிதாஸ் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன்  ஒரு காணொளியை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த வீடியோ வில் மாரிதாஸ்,

“ விதி எண் 370 நீக்கம் குறித்து திமுகவினரின்  நிலைப்பாடு ஹிஜ்புல் முஜாகிதின்,லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கர வாத அமைப்புக்களுக்கு ஆதரவாக உள்ளது.

திமுக பயங்கரவாதிகள் மற்றும் குற்றம் புரிவோருக்கு ஆதரவு அளிக்கிறது.

திமுக இதற்காகப் பாகிஸ்தானில் இருந்து பணம் பெறுகிறதா அல்லது பயங்கரவாத அமைப்புக்களுடன் புரிந்துணர்வு அடிப்படையில் அறிக்கைகளை திமுக வெளியிடுகிறதா?”

எனக் கேட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ”மேலே குறிப்பிட்ட  அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை, மாரிதாஸ் சமூக ஊடகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தவறான தகவலைப் பரப்பி வருகிறார். இதற்கு மு க ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகும். காஷ்மீர் மக்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே பாஜக அரசு முடிவு எடுத்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

காஷ்மீர் மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய  மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் திமுகவை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாரிதாஸ் சித்தரித்து வருகிறார். மாரிதாஸ் இவ்வாறு பொய்த் தகவலைப் பரப்புவது இந்திய தண்டனைப்பிரிவு சட்டம் (503) பிரிவு எண் (2) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் மாரிதாஸ் தனது வலைதளத்தில் தனது தளத்திற்கு நன்கொடை பெற்று வருகிறார்.

அப்பாவிகளிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு தவறான தகவல்களை  அளிப்பது சட்டவிரோதமாகும். மேலும் அவர் நன்கொடைகளைப் பெற ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவில்லை எனக் கூரப்படுகிறது. எனவே அவர் மீது அந்த குற்றச்சாட்டையும் அளிக்கிறோம். மாரிதாஸ் மீது உடனடியாக வழக்குப் பதிந்து விசாரணை செய்து சட்ட பூர்வ தண்டனை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது.