சென்னை: மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாநகர ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவராக இருந்தவர் மானகிரி கணேசன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநரை மாற்றக்கோரி, சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் உடல்நலன் பாதித்த அவர் சில காலம் ஓய்வில் இருந்தார்.
இதற்கிடையில், திமுகவினர் சிலர் கட்சியின் பெயரை சொல்லி பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது குறித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக தலைமைக்கும், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மதுரை மூலக்கரை பகுதியிலுள்ள திமுக எம்எல்ஏ கோ.தளபதியை மானகிரி கணேசன் சந்தித்து பேசினார். இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே வந்தவர், எம்எல்எ வீடு முன்பு திடீரென மண்எண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்மீதான தீயை அணைத்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சுமார் 90% காயத்துடன் மீட்கப்பட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திமுக எம்எல்ஏவை சந்தித்தபோது, கணேசனை எம்எல்ஏ ஏதும் திட்டினாரா என்பதுகுறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது. இது மதுரையில் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.