திருச்சி: பாஜகவின் எத்தனை டீம் வந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை என கூறிய அமைச்சர் ரகுபதி, பாஜகவின் சி டீம்தான் விஜய்-ன் தவெக என்று விமர்சித்து உள்ளார். திமுகவுக்கு பெண்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதால் அதை குறைக்க விஜய் கனவு காண்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் 74வது அணி சிறை காவலர்கள் பயிற்சி நிறைவு விழா திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் மகேஸ்வர் தயாள் மற்றும் திருச்சி, மதுரை, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜிக்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ரகுபதி கூறியதாவது, ” சிறையில் உள்ள சிறைவாசிகள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றன. சிறை உணவை விரும்பி உண்ணும் வகையில் அவர்களுக்கான உணவு வழங்கப்படுகிறது. சிறைவாசிகளின் உறவினர்கள் அவர்களை சந்திக்க வந்தால் தொலைபேசி மூலமாக பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளோம்.
அதேபோல வீடியோ காலில் பேசுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். காவலர்கள் உடலில் அணியும் கேமரா சிறை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகள் சிறை துறையில் செய்யப்பட்டு வருகிறது” என்றவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து மாதங்களில் தண்டனை பெற்று கொடுத்துள்ளோம். அதை செய்தது தமிழக காவல்துறை தான். பொள்ளாச்சி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவே காலதாமதப்படுத்தினார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் புகார் கொடுத்தவுடனேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன் பின் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த குழுவில் இருந்த அதிகாரிகள் அனைவரும் தமிழக காவல்துறையை சேர்ந்தவர்கள் தான். ஐந்து மாதங்களில் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்த அரசு பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
திமுக அரசு மீது பெண்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதை அறிந்தவர்கள் ஏதாவது ஒன்றைக் கூறி அந்த ஆதரவை குறைக்க முடியுமா? என பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் பகல் கனவு நிச்சயம் நிறைவேறாது. அதற்குக் காரணம் தமிழக பெண்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். யார் தங்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை வழங்குவார்கள், அவர்களுக்கான திட்டங்களை யார் செயல்படுத்துவார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள்.
தவெகவுக்கு பெண்கள் வாக்கு வங்கி கிடையாது. அதனால், பாஜகவின் C டீமான விஜய் திமுக அரசை குறைகூறுகிறார். பாஜக-வின் ‘B’ டீம் குறித்தே நாங்கள் கவலைப்பட மாட்டோம் அப்படி இருக்கையில், C டீம் குறித்தும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை. அப்படி யாரும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் யார் என்று கூறினால் அவர்களுக்கும் தண்டனை பெற்று தருவோம்.
வழக்கு விசாரணை நடந்தபோது யாரும் எதுவும் பேசாமல், விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வந்த பின்பு அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக பொய்யை மட்டும் மூலதனமாக வைத்துள்ளவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். அது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுப்பதால் தான் இது நடக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆட்சியில் சிறுவர்கள் சீரழிந்து போகிறார்கள் என கூறுவது தவறு. இந்த ஆட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் இவ்வாறு பேசுகிறார்கள்” என்றும் கூறினார்.