சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஆகஸ்டு 7ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க1டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. மேலும் கலைஞர் நூற்றாண்டையொட்டி பல்வேறு நிகழ்வுகளுக்கும் கட்சி தலைமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 05-08-2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.