சென்னை:

மிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்வி  குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கு கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தரப்பில் புகழேந்தி நிறுத்தப்பட்டிருந்தார். அதிமுக தரப்பில் முத்தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டிருந்தது. அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அதுபோல நாங்குனேரி தொகுதியில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரபல கட்டுமான அதிபரும், சென்னை ரூபி பில்டர்ஸ் அதிபருமான  மனோகரன் களமிறங்கினார். அவரை எதிர்த்து அந்த பகுதியைச்சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன் களமிறங்கினார். இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரு தொகுதிகளிலம் 2 கட்ட பிரசாரம் செய்தார். ஊர் ஊராகச் சென்றும், திண்ணை பிரசாரம் மேற்கொண்டும், செல்ஃபி எடுத்தும் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பொதுமக்கள்  அமோக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது இரு தொகுதிகளிலும் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தோல்வி அடைந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றிபெறும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு திமுக தோல்வி அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விக்கிரவாண்டி தோல்வி குறித்து விவாதித்தார்.