அவிநாசி: அவிநாசியில் அரசு துவக்கப்பள்ளியில் புகுந்து தி.மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மாவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் பெருமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கவுசிலர் கணவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, 17வது வார்டு, கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்திற்குள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வார்டு கவுன்சிலர் ரமணியிடம் பள்ளி தலைமை ஆசிரியர் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து. வார்டு கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமி பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சில மாணவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி தலைமையாசிரியரிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தலைமை ஆசிரியரின் கழுத்தை பிடித்து தள்ள முயன்றார். இந்த சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.