தஞ்சாவூர்: கவுன்சிலருக்கான வேட்புமனுவில் உண்மை மறைக்கப்ட்டது தெரிய வந்ததால், தஞ்சாவூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அண்ணா பிரகாஷ் என்பவரை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றி பெற்று, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பெரும்பாலான பேரூராட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அண்ணா.பிரகாஷ். இவர் தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ டிகேஜி.நீலமேகத்தின் அக்கா மகன். இவர் தனது வேட்புமனுவில் உண்மையான தகவல்களை மறைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் எழுந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ், அவரது தம்பி ராம்பிரசாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, கடந்த மார்ச் 3-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து கவுன்சிலர், ராம்பிரசாத் மார்ச் 18-ம் தேதி மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், அதை ஏற்க ஆணையர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் தகுதியை அண்ணா.பிரகாஷ் இழந்துவிட்டதாக கூறி, அவருக்கு ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார். : ராம்பிரசாத்அளித்த தகவலின் அடிப்படையில், அண்ணா.பிரகாஷ் மாமன்றஉறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாக, அவருக்கு பதிவஞ்சலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் மார்ச் 30-ம் தேதி (நாளை) நடைபெற உள்ள நிலையில், அண்ணா.பிரகாஷ் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்றார்.
மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கெடுபிடிக்கு பெயர் போனவர் சரவணகுமார். மாநகராட்சி சொத்துக்களை மீட்பதிலும், வரி வசூலிப்பதிலும் கடுமையாக நடந்துகொள்பவர் என்று கூறப்படுகிறது. தற்போது திமுக கவுன்சிலரை பதவி ஏற்றம் செய்துள்ளது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆணையர் சரவணகுமார் விரைவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.