சென்னை:
“திருமதி.டி.யசோதா அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல திராவிடப் பேரியக்கத்திற்கும் இழப்பு” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. டி.யசோதா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் – என் அன்பிற்குரிய அக்காவுமான திருமதி.டி.யசோதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1980-ல் சட்டமன்ற உறுப்பினராகி, 1984, 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது குரல் நாட்டுப் பிரச்சினைகளில் – மாநிலப் பிரச்சினைகளில் – தொகுதி பிரச்சினைகளில் முன்னணி வகித்த – சட்டமன்றத்தின் முக்கியக் குரலாகத் திகழ்ந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர் – எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல் பழகியவர்; பாசம் காட்டியவர். அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைச் சட்டமன்றத்தில் எதிரொலித்தவர்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் – ஆளும் கூட்டணி வரிசையில் இருந்தாலும் திருமதி. யசோதா அக்கா அவர்களுக்குத் தொகுதி மக்கள்தான் பிரதானம்! அதைத்தாண்டி எதையும் சிந்திக்காதவர். அம்மக்களுக்காக உழைப்பதுதான் தனது வாழ்நாள் பணி என்பதில் இறுதி மூச்சுவரை உறுதியாக இருந்தவர்.

2006-ல் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடமும், துணை முதலமைச்சராக இருந்த என்னிடமும் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை, போராடியல்ல- எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் உரிமையுடன் பெற்று நிறைவேற்றியவர். சட்டமன்றத்தில் இருந்த பெண் உறுப்பினர்களில் – சாதனை வீராங்கனையாகத் திகழ்ந்த எனது பாசத்திற்குரிய அக்கா நம்மிடம் இன்று இல்லை என்பதை என் மனம் நினைத்துப் பார்க்கவே பதறுகிறது.

திருமதி. டி.யசோதா அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல – அடித்தட்டு மக்களின் விழிப்புணர்வுக்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்டவர் என்ற முறையில் திராவிடப் பேரியக்கத்திற்கும் இழப்பு! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் இயக்கத்திற்கும் – திருப்பெரும்புதூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.