சேலம்: பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடுவதா? என திமுகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான சிற்றரசு தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. இதை திமுகவினர் கொண்டாடி மகிழ்சின்றனர். இது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பெரும்பாலான மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கொலை குற்றவாளியை முதல்வர் ஸ்டாலின் கட்டித்தழுவி வாழ்த்தியதும், அவரத கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடுவதும், ராஜீவ் காந்தி கொலை நிகழ்வின்போது உயிரிழந்த 16 காவலர்களின் குடும்பத்தினரிடையேயும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல கட்சிகள் திமுகவின் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாட்டின் உயர்ந்த பகுதியில் இருந்த ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை தற்கொலை வெடிகுண்டு மூலம் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை கொண்டாடுவது, இறையான்மைக்கு எதிரானது என்று கொந்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பேரறிவாளன்   விடுதலையை இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுகவினரை கண்டித்தும், அதை கண்டிக்காத மாநில காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கட்சியின் மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உலகம் போற்றும் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே எனது காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிற்றரசு,  தான் 1984ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளேன். ஆரம்ப காலத்தில் மாணவர் அணி, இளைஞர் அணி, மாவட்டத்தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளேன். உலக நாடுகள் போற்றும் தலைவரான முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை கூட்டணி கட்சியினர் கொண்டாடுவது முறையல்ல. அதை எற்க முடியாது.  அதனால்,  திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, எனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களான சித்தையன், வட்டாரத்தலைவர்கள் ஆர்.சுபாஷ், எம்.ஆர்.வஜ்ஜிரம், சரவணன், வேலன், பூபதி ராஜா, நகரத்தலைவர் கணேசன், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் மோகன், மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட பல கட்சி நிர்வாகிகளும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.