சென்னை: தனியார் அமைப்புகள் நேரடியாக நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு மீது ஏப்.15ம் தேதி விசாரணை வருகிறது.

தனியார் அமைப்புகள் கொரோனா நிவாரணம் வழங்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல தரப்பிலும் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, திமுகவினர் பாதுகாப்பான முறையில் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கின்றனர்.

வசதி படைத்த மக்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதி தந்துள்ள அரசு , ஏழை மக்களுக்கு நேரடியாக நிவாராண பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் , உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே நிவாரண பொருட்கள் வழங்கும் திமுகவினரை தடுக்க கூடாது,  அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த வழக்கின் மீது வரும் 15ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தனியாக வழக்கு தொடர்ந்துள்ளார்.