நாமக்கல்:  தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணமே தவிர  பெரியார் இல்லை என முன்னாள் திமுக நிர்வாகியும், இந்நாள் பாஜக நிர்வாகி யுமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திராவிட கட்சிகளின் தலைவராக பார்க்கும் பெரியாரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுகவினர் மற்றும் திகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் பெரியார் குறித்த பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் பேசிய கட்சியின் மாநில பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்,  “திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியும் அவரின் சுதந்திரா கட்சியும் தான் காரணமே தவிர பெரியார் காரணமில்லை” என  தெரிவித்துள்ளார்.

பெரியார் எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என முதல்வர் சொல்கிறார். அப்படியிருக்க கடந்த 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என பெரியார் ஏன் சொன்னார் என கேள்வி எழுப்பியவர்,

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு  வந்தால் தமிழகம் நாசமாக போய்விடும் என்றார்.

அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் ராஜாஜியும், அவர் தொடங்கிய   சுதந்திரா கட்சியும் தான் காரணமே தவிர,  பெரியார் காரணம் இல்லை.

இந்த பூமி தேசியத்தையும், தெய்வீதகத்தையும் அடிப்படையாகக் கொண்ட பூமி. தேசியத்தையும், தெய்வீகத்தையும் திராவிடம் என்ற போர்வை போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார்.

2026-ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடுக்கும் ஆயுதம்  தேர்தலில் பலிக்காது என தெரிவித்த கேபிஆர்,  திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசாங்கம் தவறான அரசாங்கம். இதை வழிநடத்தும் தலைவர்கள் தவறான தலைவர்கள். எனவே இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவுக்கு எதிராக உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.