தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கி 22ந்தேதி முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று இன்று (25ந்தேதி) வேட்புமனு வாபஸ் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதையும், கூறாத பல மக்கள் நலத்திட்டங்களையுத் அறிவித்து உள்ளது என்றவர், திமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்.