சென்னை
திமுக மற்றும் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்

அடுத்த மாதத்துடன் தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த 6 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2- ந்தேதி தொடங்கியது.
இம்முறை, எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. தனது மற்றொரு எம்.பி. பதவியை கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கியது. ஆகவே அந்த இடத்திற்கு கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வேடொய் மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். மொத்தம் தி.மு.க. – 4, அ.தி.மு.க .-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
விதிப்படி 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாத அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள 7 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஆகவே களத்தில் உள்ள 6 பேர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.