சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி, தொகுதி பங்கீடு பேரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகளான முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து, இன்று மாலை கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக ட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அவகாசம் குறைவாகவே உள்ளதால், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே விறுவிறுப்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
திமுக, காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. இதையடுத்து, இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளது. கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக திமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக மற்றும் தேமுதிக இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.