சென்னை:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த மாபெரும் பேரணி காலை 10.15 மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத் தில் இருந்து தொடங்கியது இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட , அதன் கூட்டணி கட்சியினர் இன்று பிரமாண்ட கண்டன பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 9 மணி முதல் பேரணி தொடங்கும் இடமான, எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகம் அருகில் உள்ள சந்திப்பில் திமுக உள்பட அனைத்துக்கட்சி தொண்டர்களும் குவியத் தொடங்கினர். காலை 9 மணி முதலே அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு வந்தவண்ணம் இருந்த நிலையில் சுமார் 10 மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வருகை தந்தார்.
அதைத்தொடர்ந்து, காலை 10.15 மணி அளவில் பிரமாண்ட பேரணி தொடங்கியது. இந்த பேரணி யில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, வைகோ, வீரமணி, திருமாவளவன், கம்யூனிஸ்டு தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், சவுந்தரராஜன் மற்றும் ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்பட பல கட்சித் தலைவர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
வேண்டாம் வேண்டாம், குடியுரிமை சட்டம் வேண்டாம் என்று கோஷத்துடன் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது….
பேரணி கூவம் கரையோரத்தையொட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையை சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவடைய உள்ளது.
இதன் காரணமாக எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.