சென்னை:

திமுக கூட்டணியானது  ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற மக்கள் கூட்டணி என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அமைக்கப்பட்டு வரும் தேர்தல் கூட்டணி குறித்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

அண்ணா கண்ட பேரியக்கம்; தலைவர் கலைஞர் கட்டிக்காத்த கொள்கைப் பட்டாளமாம் தி.மு.கழகம்; தனது தூய லட்சியப் பாதையில் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. மத்தியிலும்  மாநிலத்திலும் நடந்திடும் அநியாய  அவல ஆட்சி தொடர்ந்திடாமல் தடுத்திட – தவிர்த்திட  தகர்த்திட – இனி எக்காலத்திலும் எத்தர் கூட்டம் நம் தாய்நாட்டு மக்களை ஏமாளிகளாக்காமல் காத்திட, இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி வீரமிகு விருதுநகரில் மார்ச் 6-ந்தேதி நடைபெற இருக்கிறது.

மார்ச் என்ற ஆங்கிலத் சொல்லுக்கு வீறுநடை என்பதே பொருளாகும். ஆறு போல பெருக்கெ டுக்கும் வீறுநடையை மார்ச் 6ல் விருதுநகரில் காட்டிடவும், அதனை வெற்றி நடையாக மாற்றிடவும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளை உங்களின் ஒருவனான நான் அன்புடன் அழைக்கிறேன்.

ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் மக்கள் விரோத பாசிச மத்திய அரசையும்  அதனிடம் மண்டியிட்டு மாநிலத்தின் உரிமைகளை அடகுவைத்த மாநில அரசையும் ஒரு சேர எதிர்க்கும் உணர்வும் வல்லமையும் கொண்ட ஒரே இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர்  பேரணி அமையப் போகிறது.

காலத்தின் தேவை கருதி  நாட்டின் நலனில் அக்கறை கொண்டு திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் பேரியக்கமும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற -சிறுபான்மை நலன் காக்கின்ற  ஒடுக்கப்பட் டோர் உரிமையைப் பாதுகாக்கின்ற  யாரையும் ஒதுக்கி வைக்காத, எல்லோருக்குமான  சமத்துவத்தை வலியுறுத்துகிற கொள்கைக் கூட்டணி; மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி.

எதிர்ப்புறம் இருப்பவர்களைப் பாருங்கள்! மிரட்டலுக்குப் பயந்து கூனிக்குறுகி கூட்டணி சேர்ந்த வர்கள், நேற்று வரை நாராச நடையில் விமர்சித்து விட்டு இன்று மனசாட்சியை விற்றுவிட்டு அதற்கொரு விலை வைத்து கூட்டணி கண்டவர்கள், எது பற்றியும் கவலையின்றி சுயநல எதிர்பார்ப்புகளையே முதலீடாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் என ஒட்டு மொத்த மக்கள் விரோதக் கூட்டமும் ஒன்று சேர்ந்து வரிசையாக நிற்கிறது. தங்களை விற்றுக் கொண்டதுபோல மக்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பணநாயக மமதையை ஜனநாயக ஆயுதம் கொண்டு விரட்டிட, ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திட, வெற்றிக்கு கட்டியம் கூறிட விருதுநகரில் திரண்டிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.