சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் மெகா கூட்டணியை உருவாக்கி வருகிறது திமுக. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

இன்றைய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுடன் உடன்பாடு  ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதி கள் ஒதுக்கப்பட்டது. அதுபோல,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்றைய பேச்சு வார்த்தையை தொடர்ந்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்,  மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டுக் குழுவினர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, மதிமுக 3 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் 2 மக்களவைத் தொகுதியையும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் ஒதுக்குமாறு கோரின. இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 2 மக்களவைத் தொகுதிகளையும் கோரி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பப்படுகிறது.