காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ள தி.மு.க.வுக்கு எஞ்சியுள்ள 6 கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் சிக்கல் முளைத்துள்ளது.
நேற்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்,தி.மு.க.தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்தினர்.கடந்த தேர்தல்களில் தாங்கள் வென்ற தொகுதிகளின் பட்டியலை அளித்த சி.பி.எம். தலைவர்கள் ‘’இதில் இரண்டு தொகுதிகள் நிச்சயம் வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
கன்னியாகுமரி தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதம் காட்டினர்.2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சி.பி.எம்.மின் பெல்லார்மின் ,இந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார்.
இதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ,தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்தினர்.அவர்களும் இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளனர். நாகை மற்றும் கோவை ஆகிய இரு தொகுதிகள் அவர்கள் இலக்கு.
ஆனால் .ஆளுக்கு ஒரு ‘சீட்’ மட்டுமே தர முடியும் என்று தி.மு.க.திட்டவட்டமாக கூறி விட்டது.
இதனால் இடதுசாரி தலைவர்கள் –‘அப்செட்’.
அந்த கட்சிகளின் கோட்டைகளாக இருந்த மே.வங்கமும், திரிபுராவும் கை நழுவி போய் விட்டதால்- கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் தான் அவர்களின் ஒரே நம்பிக்கை.
தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை உறுதி படுத்திக்கொள்ள , தமிழகத்தின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்துள்ளதால் –இரு தொகுதிகளை கேட்டு நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
மனித நேய மக்கள் கட்சியும் ,தி.மு.க.வுடன் நேற்று பேச்சு நடத்தியது. வேலூர் அல்லது ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கு தர வேண்டும் என்று அந்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-பாப்பாங்குளம் பாரதி