சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாநிலங்களில் வெளியாக உள்ள நிலையில், தொகுதிப்பங்கிடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள்  கூட்டணி கட்சிகளை பிடிப்பதிலும், தொகுதி பங்கீடு குறித்து பேசுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில்,  மக்களவைத் தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவுக்கு பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருடன் முன்னாள் அமைச்சர்கள்   ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி,  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைச்சாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.