சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசிய வந்த தேமுதிக இன்று எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் செயல்பட முடியாத விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் ‘பண பேரம்’ என்று அவரது கட்சி யினரே  குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதற்கிடையில், நேற்று முன்தினம், கூட்டணி பேச்சுக்கள் முடிந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாக தேமுதிகவினர் திரைமறைவில்  திமுக கதவை தட்டியதை, திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.

இதன் காரணமாக பிரமேலதாவின் தகிடுத்தனம் வெளிப்பட்ட நிலையில், நேற்று செய்தியாளர் களை தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், இன்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.  தொடக்கம் முதலே செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியும், ஒருமையில் விமர்சித்து வந்தார்.

கேள்வி கேட்கும்  செய்தியாளரை நீ யார், எந்த ஊடகம் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு எகத்தாளம் செய்தும் விமர்சித்தார். இதன் காரணமாக செய்தியாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாத சூழல் வரும் போது செய்தியாளர் களை நீ எந்த டிவி, எந்த பத்திரிகை  என கேட்பது எப்படிப்பட்ட பதில்… செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்வதுதான் தலைவனுக்கு அழகு. ஆனால், அதை மதிக்க தெரியாத பிரமேலதா செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்வதிலேயே குறியாக இருந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களை அனைவரும் மொத்தமாக எழுந்து நின்று, “ஒருமையில் பேசுவதை நிறுத்திவிட்டு மரியாதையாக பேசுவதாக இருந்தால், செய்தியாளர் சந்திப்பை தொடருங்கள், அல்லது முடித்துக் கொள்ளுங்கள்” என்றனர்.

இதற்கும்,  நீங்கள் எதைக்கேட்டாலும் நாங்கள் பொறுமையாக பதிலளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியவர், பின்னர் மரியாதையுடன் பேசத் தொடங்கினார்.

இதுகுறித்து பேசிக்கொண்ட  சக ஊடக செய்தியாளர்கள், விஜயகாந்தை போலவே, பிரேமலதா வும் சண்டக்கோழியாக மாறி விட்டார் போலும்..  அவர்தான் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, நாக்கை துருத்திக்கொண்டும், மைக்கை பிடுங்கி அடிப்பது போன்று ஆவேசப்படுவார்… ஆனால்,  தற்போது அவரே  செயல்பட முடியாத நிலையில், அவரது மனைவி இந்த வரத்து வருகிறாரே என்று கமென்ட் அடித்தனர்.