தருமபுரி: 2026 ஜன. 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறும், யாருடன் கூட்டணி? என்பது குறித்து நேரம் வரும்போத தெரிவிக்கப்படும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். மேலும், கோயம்பேடு 100 அடி சாலைக்கு மறைந்த கேப்டன் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டள்ளன.

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெறுகிறது. பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்படகட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர். விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில், தேமுதிக இளைஞரணி செயலராக விஜய பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அவர் இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, அட்சய திருதியை நல்ல நாளில், கட்சியின் இளைஞரணி செயலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தனது மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தார் பிரேமலதா.

இதுவரை, விஜய பிரபாகரன் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு கட்சிப் பதவி ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, விஜய பிரபாகரனுக்கு தற்போது இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தேமுதிகவில் எல்.கே.சுதீஷின் கட்சிப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வந்த அவர், அக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தேமுதிகவை பலப்படுத்துவது மற்றும் புதிய பொறுப்பு வழங்குவது, 2026 தேர்தலை எவ்வாறு சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, தேமுதிக மாநில மாநாடு குறித்த அறிவிப்பை பிரேமலதா வெளியிட்டார்.

அதன்படி, கடலூரில் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள்தேமுதிக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்டத்திலும் கழகத்திற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் மற்றும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிர் இழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர். இதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கின்றது.
- தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.
- தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும்.
- சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.
- வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.
- மதுபானம் விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
- கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.
- மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
- தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டது. தற்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் இணைவது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிக்கப்படலாம். தேமுதிக 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.