சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ந்தேதிக்கு பிறகு வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸால் வரலாறு காணாத நிகழ்வு உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் சிக்கியிருக்கும் மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்‍. ஏற்கனவே ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தேமுதிக தலைமை கழகமும் கொரோனா பயன்பாட்டிற்கு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பல மாவட்டங்களில் மக்களுக்கான மக்கள் பணி தொடங்கப்பட்டிருக்கும் வேளையில், ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு, சமூக இடைவேளி, இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில் மாவட்ட வாரியாக, நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும். உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம்.

கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.