சென்னை
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைக்க அக்கட்சி துணைப் பொதுச்செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலை காலமானார். நேற்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகத் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தே மு தி க கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இரவு 7 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று முதல் ஜனவரி.1ம் தேதி இரவு 9 மணி வரை விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தேமுதிக துணை பொதுச்செயலர் சுதீஷ் தெரிவித்ததுடன் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வலியுறுத்த உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை வைப்பதற்குத் தமிழக அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.