சென்னை: தேமுதிகவுக்கு  அங்கீகாரம் கொடுத்தது அதிமுகதான்,  வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என தேமுதிகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தோழமை கட்சியான தேமுதிக, தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இன்று கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து செய்தியளார்களை சந்தித்த எல்.கே.சுதீஷ், அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அதுபோல, பண்ருட்டியில் பேசிய விஜய பிரபாகரன், யாருக்கும் சளைத்தவர்கள் தேமுதிகவினர் அல்ல. அதிமுக தலைமை சரியில்லை. எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக மண்ணைக் கவ்வும். அதிமுகவுக்கு இனி இறங்கு முகம் தான் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய உடனேயே தேமுதிகவினர் அதிமுகவை கடுமையாக விமர்சிப்பது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு பாதிப்பில்லை. பாதிப்புக்கு தேமுதிகவுக்கு தான். தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது.

அதிமுகவை பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி இறைப்பதா? வார்த்தைகளை அளந்து பேசுங்கள்,  கீழ்த்தரமான அரசியலை தேமுதிக முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும்,  கூட்டணியில் இருந்த போதே சுதீஷ் பேசிய பேச்சுகளை பொறுத்துக் கொண்டோம்  என்றவர்,  தமிழக சட்டமன்றத்தில், தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுக தான் . இன்று  நன்றியை மறந்துவிட்டு சுதீஷ் பேசுகிறார்.

தேமுதிகவின் செல்வாக்கு, வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். ஆனால், புத்திசாலித்தனத்துடன் தேமுதிக செயல்படவில்லை என்றால் என்ன செய்வது?  கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என்றவர்,  அதிமுக தோற்கும் என்று கூறும் சுதீஷ் என்ன ஜோசியரா என கேள்வி எழுப்பியதுடன்,  தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை.

அதிமுக குறித்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசுவதை பொருட்படுத்தவில்லை  என்றதுடன் கூட்டணியில் இருந்து விலகியது  தேமுதிகவிற்கு தான்  பாதிப்பு  என்றவர், அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்று முடிவெடுத்த பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும்  என்றும் கேள்வி எழுப்பினார்.

பாமக, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பாமக மற்றும் பாஜகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கீடு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.