சென்னை: 60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்திட வேண்டும் எனதேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: முடி திருத்தம் செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் கடினமான இந்த காலகட்டத்தில் 60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
தற்போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் நடைபெறாததாலும், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் சமையல் கலைஞர்கள் வருமானம் இன்றி, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
மேலும், அரசுக்கு வருமானம் இல்லை என்பதால், மதுக்கடைகளை திறந்திருப்பதை போல, 60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் தொழிலை இயல்பாக நடத்துவதற்கு அனுமதி தந்து, ஒவ்வொரு குடும்பமும் வருமானத்தை ஈட்ட, வழிவகை செய்ய வேண்டும்  என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.