சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறி வந்த தேமுதிக, மற்றொருபுறம் இன்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் பிடிவாதம் காரணமாக, இன்று தேமுதிக கூட்டணிக்காக அலைபாய்ந்துகொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிகளை அமைப்பதில், திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வந்தன.
திமுக தலைமையில் 9 கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடும் சுமூகமாக நடைபெற்ற முடிவடைந்தது. தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டதாக அறிவித்த திமுக தலைவர் இன்று விருதுநகரில் நடைபெறும் தென்மண்டல மாநாட்டுக்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே தேமுதிக தலைவரை மு.க.ஸ்டாலின் கூட்டணி தொடர்பாக சந்தித்து பேசிய நிலையில், தேமுகதிகவின் நிபந்தனைகளை கேட்டு அரண்டுபோன நிலையில், அதிமுக தேமுதிகவை வளைத்து போட எண்ணியது. ஆனால், அதிமுக பாஜக கூட்டணிக்கும் தண்ணிக் காட்டி வந்த தேமுதிகவுக்கு, இறுதியாக இன்று காலை வரை அதிமுக கெடு விதித்தது.
ஆனால், தற்போதுவரை தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்காமல், மீண்டும் திமுக காலடியில் சரண் அடைந்தது. தேமுதிக அவைத்தலைவர் உள்பட சில முக்கிய நிர்வாகிகள், திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசினர்.
ஆனால், துரைமுருகனோ, திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், எங்களிடம் கொடுக்க தொகுதிகள் இல்லை என்று தெரிவித்தேன். மேலும், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிய பிறகு அவரிடம் பேசுங்கள் என்று கூறி அனுப்பி விட்டதாகவும் செய்தியாளர்களிடம், தேமுதிக பேச்சு வார்த்தை நடத்த வந்தை உறுதி செய்தார்.
இதன் காரணமாக, தேமுதிகவுக்கு திமுக கதவை சாற்றிவிட்டது உறுதியாகிவிட்ட நிலையில், ஒன்று அதிமுக கூட்டணியில் ஐக்கியமாக வேண்டும் அல்லது, தனித்தோ அல்லது 3வதுஅணி அமைத்தோ தேர்தலில் போட்டியிடலாம்…‘