சென்னை: நீரழிவு உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளை அவரது குடும்பத்தினரே கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் திடீரென விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில நாட்கள் கடந்தும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படாதது சந்தேகத்தை எழுப்பிய நிலையில், நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்று விரல்கள் அகற்றப்பட்டு இருப்பதாக, மருத்துவமனையும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் இருக்கிறார் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து இன்று காலை திடீரென வதந்திகள் பரவியது. இதையடுத்து சிலர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இன்று மாலை அவர் வீடு திரும்ப இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.